420. இன்று எழுத்தாளர் சுஜாதா வீட்டில்
ஒரு 2 வருடமாக, தேசிகனின் உதவியோடு அவரை நேரில் சந்திக்க எண்ணியபோதெல்லாம், ஏதாவது ஒரு காரணத்தால், சந்திப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இப்போது அவரே போய் விட்டார் :(
இன்று காலை சுஜாதா அவர்களுக்கு அஞ்சலி செலுத்த அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். பல பிரபலங்கள் வந்திருந்தாலும், சூழல் எந்த வித ஆரவாரமும் இன்றி அமைதியாக சாதாரணமாகவே இருந்தது. கண்ணாடிப் பெட்டியில் இருந்தவர் உறங்குவது போலத் தான் தோன்றியது. அருகில் இருந்த தேசிகன் சோகத்தில் இருண்டு போய் காணப்பட்டார். கடந்த பல வருடங்களாக சுஜாதா தேசிகனை தனது சொந்த மகன் போலத் தான் பாவித்து வந்ததை நான் அறிவேன். தேசிகனும் சுஜாதா மேல் மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்திருந்ததோடு, தேவையான சமயங்களில் அவர் கூட இருந்து பல உதவிகள் செய்திருப்பதும் எனக்குத் தெரியும். சுஜாதாவுக்கு மிகவும் நெருக்கமானவரான மனுஷ்யபுத்திரனும் சோகமே வடிவாக காட்சியளித்தார். அவரிடமும், தேசிகனிடமும் என் இரங்கலைத் தெரிவித்தேன் !
நான் அங்கு செல்வதற்கு சற்று முன்பு தான் கலைஞரும், கமலும் தங்களது இறுதி மரியாதையை செலுத்தி விட்டு சென்றிருந்தனர். மதனையும், இயக்குனர் வசந்த்தையும், கனிமொழியையும் (சுஜாதாவுக்கு மிக நெருக்கமானவரும் கூட) பார்த்தேன். நான் பார்த்தவரை, பாலு மகேந்திரா, சுஹாசினி, மணிரத்னம், பிரமிட் நடராஜன், சிவகுமார், அவரது மகன் கார்த்திக், பாலகுமாரன், அனுராதா ரமணன், சாரு நிவேதிதா, வைகோ, திருமாவளவன் என்று பல பிரபலங்கள் இரங்கல் தெரிவிக்க வந்தனர். வந்தவர்களை வைத்துப் பார்த்தால், தமிழ் எழுத்தாளராக, சுஜாதா ஏதோ சாதித்து இருப்பார் போலத் தான் தெரிகிறது !!! பதிவர்களில் ரஜினி ராம்கி, டோண்டு, அதியமான், உண்மைத்தமிழன், இரா.முருகன், ஹரன் பிரசன்னா என்று சிலரை சந்திக்க முடிந்தது.
எனக்கும் சுஜாதாவுக்குமான உறவு, எழுத்தாளர்-வாசகன் என்பதோடு முடிந்து விடுகிறது. அவர் எழுத்துக்களோடு மட்டுமே எனக்கு பரிச்சியம் உண்டு. அவர் எழுதியதில் ஒரு 90% வாசித்திருப்பேன். என்னவோ, அவர் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை (சிறுகதை, நாவல், நாடகம், சயின்ஸ் பிக்ஷன், அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்தவை, கட்டுரைகள்) வேறு யாரும் ஏற்படுத்தவில்லை, அவர் 'இலக்கியம்' என்று பெரிய அளவில் எதுவும் படைத்திராவிட்டாலும்! அவர் படைப்புகளில் பலவற்றை
இரண்டு மூன்று முறை படித்திருக்கிறேன்.
ஒரே ஒரு முறை அவரை நேரில் பார்த்திருக்கிறேன், 24 வருடங்களுக்கு முன். நான் கோயமுத்தூர் GCTயில் பொறியியல் மாணவனாக இருந்த காலகட்டத்தில், எங்கள் மின்னணுவியல் அசோசியேஷன் அழைப்பின் பேரில் வந்திருந்தார். அன்றைய கல்லூரி தின விழாவில் extempore-ஆக ஒரு 30 நிமிடங்கள், ஆங்கிலக் கலப்பின்றி அவர் தமிழில் உரையாற்றியதை மறக்கவே முடியாது !!! அது போலவே, ஒரே ஒரு முறை (2 மாதங்களுக்கு முன்) அவருடன் அம்பலம் சாட்டில் உரையாடியிருக்கிறேன் ! சாட்டுக்குள் சற்று தாமதமாக நுழைந்தும், தேசிகனின் நெருங்கிய நண்பர் என்று அறிமுகம் செய்து கொண்டதால், சாட்டை குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் ஒரு பத்து மணித்துளிகள் நீட்டிக்க முடிந்தது. நரேந்திர மோடி, கிரிக்கெட், வலைப்பதிவுகள் என்று சில விஷயங்கள் பற்றிய கேள்விகளுக்கு, அவரது பாணியில் பதில் கூறினார்.
அவரது 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' கதைத் தொகுப்பு ஒரு மாஸ்டர் பீஸ் என்பதில் சந்தேகமில்லை. அக்கதைகளில் காணப்படும் அவரது தேர்ந்த (அவருக்கு மட்டுமே வசப்படும்) நடையும், மெலிதாக இழையோடும் நகைச்சுவையும், சில இடங்களில் உருக்கும் சோகமும், நாஸ்டால்ஜியாவைத் தூண்டி நம்மை அசை போட வைக்கும் உத்தியும், அவரது எழுத்து ஆளுமையை பறைசாற்றுபவை! அவரது தூண்டில்
கதைகளில் காணப்படும், ஜெஃப்ரி ஆர்ச்சரின் A twist in the tale வகை துள்ளல் நடையும், இறுதியில் வரும் எதிர்பார்க்க முடியாத சடார் முடிவும் வாசிப்பவரை கட்டிப் போட்டு விடும். கணேஷ் வசந்த் பங்கு பெறும் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைகளில், துப்பு துலக்க அவர்கள் இருவரும் உரையாடும் கட்டங்களையும், மேற்கொள்ளும் சாகசங்களையும் சுஜாதாவின் நுண்ணிய அறிவியல் சார் சிந்தனை ஓட்டத்தின்
வெளிப்பாடாக நோக்கலாம். 'நிர்வாண நகரம்' நாவலில் வரும் (புத்தி கூர்மை மிக்க) நாயகனாகவே நான் சுஜாதாவைப் பார்க்கிறேன் !
அவருக்கு இரங்கல்/அஞ்சலி தெரிவிக்கும் வகையில் தமிழ் வலைப்பதிவுலகில் வெளி வந்த நாற்பதுக்கும் மேற்பட்ட இடுகைகள் சுஜாதா ஏற்படுத்திய வாசக தாக்கத்துக்கு சான்று! அவற்றில் குறிப்பிடத்தக்கவை கனடா வெங்கட், பிரகாஷ், அருள்செல்வன் கந்தசுவாமி, பெனாத்தல் சுரேஷ், காசி, டோ ண்டு, விக்கி (இன்னும் சில பெயர்கள் நினைவுக்கு சட்டென்று வர மறுக்கிறது!) எழுதியவை. ஒரு விஷயம் உறுத்தலாக இருக்கிறது. பொதுவாக, ஒருவர் இருக்கும்போதே அவரைப் பாராட்டி நாம் எழுதுவதே இல்லை என்று கூறலாம், விமர்சனம் என்ற பெயரில் குறைகளை மட்டுமே எழுதுகிறோமோ என்று தோன்றுகிறது :(
வாசகர்கள் வாழ
ஸ்ரீரங்கத்து தேவதைகள் வாழ
கணேஷ் வசந்த் மதுமிதா வாழ
ஆத்மா ஜினோ அனிதா வாழ
நீர் 'கற்றதும் பெற்றதும்' வாழ
நீர் ஏனய்யா நூறாண்டு வாழாமல் சென்று விட்டீர் ?
சுஜாதா சார், "பிரிவோம் சந்திப்போம்" !!!
என்றென்றும் அன்புடன்
பாலா
தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று.